UPI : டெபிட் கார்டு இல்லாமலே யுபிஐ பின் மாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
UPI PIN Change without Debit Card | இந்தியாவில் பரவலாக யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. யுபிஐ மூலம் பல வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க அவ்வப்போது யுபிஐ பின்னை மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் (Technology Development) நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே வருகிறது. அதன் சான்றாக இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணகான மக்கள் தொழில்நுட்ப சேவைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இந்தியர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் அம்சம் தான் UPI (Unified Payment Interface). பல உலக நாடுகளே யுபிஐ சேவையை முழுவதுமாக ஏற்காத நிலையில், இந்தியா மிக வேகமாக யுபிஐ சேவையை தழுவிக்கொண்டது.
யுபிஐ பின்னை அவ்வப்போது மாற்றம் செய்வது அவசியம்
இந்தியாவை பொருத்தவரை வளர்ச்சியில்லாத கடைகோடி கிராமங்கள் முதல், வளர்ச்சியடைந்த நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். யுபிஐ சேவையால் பண பரிவர்த்தனை மிகவும் சுலபமாக மாறிவிட்டது. வங்கிகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய தேவை எல்லாம் இப்போது இல்லை. யுபிஐ சேவை மூலம் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் உள்ளன.
யுபிஐ மூலம் எளிதாக மோசடி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்காக தான் யுபிஐ செயலின் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டு என்று கூறப்படுகிறது. யுபிஐ பின்னை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் டெபிட் கார்டு (Debit Card) தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ பின் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ பின்னை மாற்றம் செய்வது எப்படி?
டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ பின்னை மாற்றம் செய்வதற்கு மொபைல் எண், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இதனை செய்து முடித்திருந்தீர்கள் என்றால் உங்களால் மிக சுலபமாக டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ பின்னை மாற்றம் செய்யலாம்.
- அதற்கு முதலில் யுபிஐ செயலியை திறந்து வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
- பின்னர், எந்த வங்கி கணக்கிற்கு யுபிஐ பின்னை மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த கணக்கை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் யுபிஐ பின்னை அமைக்கும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு டெபிட் கார்டு மற்றும் ஆதார் ஓடிபியை பயன்படுத்தி மாற்றம் செய்வது என இரண்டு விருப்பங்கள் தோன்றும்.
- அதில் ஆதார் ஓடிபி ஆப்ஷனை தேர்வு செய்த பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபியை பதிவிட்டு மிக சுலபமாக மாற்றம் செய்து விடலாம்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் மிக சுலபமாக டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ பின் மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
யுபிஐ பின்னை அவ்வப்போது மாற்றுவது ஏன் அவசியம்?
யுபிஐ பின்னை அவ்வப்போது மாற்றம் செய்வது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஒரே யுபிஐ பின்னை பல ஆண்டுகளாக பயன்படுத்துவதன் மூலம், மோசடி சம்பவங்களில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளதால் அதனை அடிக்கடி மாற்றம் செய்வது அவசியம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.