ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? மத்திய அரசின் புதிய திட்டம்!
Government's Pension Plan for Gig Workers: மத்திய அரசு, கிக் எனப்படும் தற்காலிக தொழிலாளர்களுக்கு நிதி மற்றும் சமூக பாதுகாப்பு வழங்க புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஸ்விக்கி, ஜொமாடோ, பிளிங்கிட், உபர் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 2% பங்களிப்பை EPFO கணக்கில் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் (India) டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக நேரடி வேலை வாய்ப்புகளைவிட, ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உணவு விநியோக சேவைகள், பைக் டாக்ஸி (Bike Taxi), மற்றும் ஈ-காமர்ஸ் (E-Commerce) தளங்களில் பணியாற்றும் ‘கிக் தொழிலாளர்கள்’ (Gig Workers) என்ற புதிய தொழிலாளர் வகை உருவாகியுள்ளது. இந்த கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் நிதிப் பாதுகாப்பு இல்லாதது ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த பின்னணியில், மத்திய அரசு தற்போது முன்வைத்துள்ள ஓய்வூதியத் திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தினசரி வாழ்வாதாரத்துக்காக உழைக்கும் கிக் தொழிலாளர்களுக்காக நிதி மற்றும் சமூக பாதுகாப்பை வழங்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஸ்விக்கி, ஜொமாடோ, பிளிங்கிட், உபர் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களும் தங்கள் பிளாட்ஃபாரங்களில் பணிபுரியும் விநியோக ஒப்பந்த ஊழியர்களின் வருமானத்தில் இருந்து 2 சதவிகித பங்கை ஓய்வூதிய நிதிக்காக பெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொழிலாளர்களின் சம்பளத்தை பாதிக்குமா?
இது முழுமையாக கிக் தொழிலாளர்களின் நலனுக்காக செய்யப்படுகிற ஒரு முயற்சி. பிஸினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மேற்சொன்ன இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து 2% தொகையை EPFO (Employees Provident Fund Organization) கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். இது ஓய்வூதியத் திட்டத்துக்கான முதலீடாக அமையும்.
அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு என பல சலுகைகள்
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிக் தொழிலாளருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்படும். இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ததும், PM Jan Arogya Yojana திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக, UAN (Universal Account Number) எண் வழங்கப்படும்.
இந்த திட்டம் குறித்து வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன், முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இறுதிக் கலந்துரையாடல் நடக்கும். பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுப் பட்ஜெட்டிலும், கிக் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தது.
ஒரு பொருளாதார ஆய்வின் அடிப்படையில், 2030க்குள் இந்தியாவில் கிட்டத்தட்ட 235 மில்லியன் கிக் தொழிலாளர்கள் இருப்பார்கள் என கணிக்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையளிக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க இந்த ஓய்வூதியத் திட்டம் பெரும் பங்காற்றும் என நம்பப்படுகிறது. இந்த புதிய திட்டம், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்தும் ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமையலாம் என நம்பப்படுகிறது.