UAN-க்கு ஆதார் முக அங்கீகாரம்.. இனி UAN-ஐ ஊழியர்களே உருவாக்கி, செயல்படுத்தலாம்!
EPFO UAN Activation | UMANG செயலியில் புதிய முக அங்கீகார அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர்கள் தங்கள் ஆதார் அடிப்படையில் UAN-ஐ சுயமாக உருவாக்கி செயல்படுத்த முடியும். இந்த புதிய அம்சம் மூலம் ஊழியர்கள் ஏற்கனவே சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பெயரில் ஊழியர் வருங்கால வாய்ப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) கீழ் கணக்கு தொடங்கப்பட்டு, அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அரசு அறிமுகம் செய்த செயலி தான் UMANG. தற்போது இந்த செயலியில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அவர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் இனி UAN உருவாக்கி செயல்படுத்தலாம் – எப்படி?
ஊழியர் வருங்கால வாய்ப்பு நிதி அமைச்சகம் இனி ஆதார் (Aadhar) அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (Face Identification Technology) பயன்படுத்தி, ஊழியர்கள் தங்களது UAN (Universal Account Number) கணக்கை உருவாக்கி செயல்படுத்தும் ஒரு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UAN உருவாக்கத்தின்போது பல்வேறு தவறுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்படுவதால் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்களாகவே UAN உருவாக்கி, அதனை செயல்படுத்திக்கொள்ளவும் முடியும்.
UMANG செயலியில் வந்த முக அங்கீகார அம்சம்
UMANG செயலியில் வந்துள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம், ஊழியர்கள் தங்கள் செயலியை பயன்படுத்தி UAN உருவாக்கி அதனை தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ள முடியும். முன்னதாக UAN உருவாக்க நிறுவனங்களின் தலையிடல் தேவைப்பட்ட நிலையில், தற்போது அதற்கு அவசியம் இல்லாமல் மாறியுள்ளது. இந்த புதிய முக அங்கீகார அம்சம் மூலம் நிறுவனங்களின் உதவி இல்லாமலே அதனை செய்து முடித்துவிட முடியும். இந்த செயல்முறையை செய்து முடிக்க ஊழியர்கள் UMANG மற்றும் Aadhaar Face RD ஆகிய இரண்டு செயலிகளையும் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன?
இந்த புதிய ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார அம்சம் பலவேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
- ஊழியர்கள் 100 சதவீத சரிப்பார்ப்பு செய்துக்கொள்ள முடியும்.
- முக பொருத்தம் ஊழியர்களின் சரியான அடையாளத்தை உறுதி செய்ய உதவும்.
- ஆதார் உடன் இணைப்படும் மொபைல் எண் தானாக சரிப்பார்க்கப்படும்.
- நிறுவனத்தின் தலையிடல் இல்லாமல் ஊழியர்கள் தாங்களாவே UAN உருவாக்கி அதனை செயல்படுத்தவும் முடியும்.
- பிழைகள் பெரும் அளவு குறையும்.
எனவே ஊழியர்கள் முன்னதாக சந்தித்து வந்த சிக்கல்களை கலையும் வகையில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.