EPFO : இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம்.. EPFO அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!
Aadhaar-less UAN Creation in EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பயனர்களின் நலனுக்காக அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவது, புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் உதவி இல்லாமல் யுஏஎன் உருவாக்குவதற்கான புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization), ஊழியர்கள் தங்களது பிஎஃப் (PF – Provident Fund) கணக்கை மாற்றுவதற்கு புதிய படிவம் 13 (New Form 13) உடன், நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை உள்ளீடு செய்யாமல் UAN (Universal Account Number) எண்ணை உருவாக்கி கொள்வதற்காக புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இந்த புதிய அம்சத்தின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இபிஎஃப்ஓவின் இந்த சிறப்பு அம்சம் குறித்தும் அதில் ஊழியர்களுக்கு என்ன சிறப்பு அம்சம் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயரில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, ஊழியர்கள் இபிஎஃப்ஓ சேவைகளை மிக எளிதாக அனுகும் வகையில் அவ்வப்போது பல புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் கார்டு உதவி இல்லாமல் யுஏஎன் எண்ணை உருவாக்கிக்கொள்ளும் புதிய அம்சம் தான் அது. இந்த நிலையில், இந்த புதிய அம்சம் குறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அறிக்கை வெளியிட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்
இபிஎஃப்ஓவின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய படிவம் 13 வாயிலாக பிஎஃப் கணக்கை மாற்றுவதற்கு புதிய அலுவலகத்தின் ஒப்புதல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பழைய அலுவலகம் ஒப்புதல் அளித்தவுடன் , பிஎஃப் தொகை உடனடியாக உறுப்பினர்கள் அப்போது பணிபுரியும் புதிய அலுவலகத்தின் பிஎஃப் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆதார் உதவி இன்றி யுஏஎன் உருவாக்கத்திற்கான அனுமதியை நிறுவனங்களுக்கு இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர் அடையாள எண் மற்றும் பிற விவரங்களை மட்டுமே வைத்து யுஏஎன் எண்ணை உருவாக்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி ஆதார் உறுதிப்படுத்தல் இல்லாமல் புதிய கணக்கில் உரிய தொகையை செலுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.