ஒரு லட்சம் வரை உயரக்கூடும் தங்கம் விலை.. வல்லுநர்கள் சொல்லும் ஷாக் ரிப்போர்ட்.. ஏன் இந்த விலை ஏற்றம்?
Gold Rate: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் சுமார் 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயரும் என்றும் ஒரு சவரன் சுமார் ஒரு லட்சம் வரை விற்பனையாகலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. தினம் தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஏப்ரல் 22,2025 வரலாறு காணாத அளவு தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 9,290 ரூபாயும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 74,320 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு சவரனுக்கு 2,500 ரூபாய் உயர்ந்துள்ளது. கடுமையான இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தங்கம் வாங்குவதற்கான வழி இனி இருக்காது என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத உச்சம்:
நம் இந்திய கலாச்சாரத்தில் ஒன்றாக உள்ளது தங்கம். எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் திருமணம் ஆக இருந்தாலும் எந்த ஒரு நல்ல காரியமாக இருப்பினும் அதற்கு அதில் தங்கத்திற்கு என்ற ஒரு இடம் ஒதுக்கப்படும். தலைமுறை தலைமுறையாக இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் இன்றளவும் திருமணம் என்றால் தங்கத்திற்கு தனி முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை சுமார் ஒரு சவரன் 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு முதல் மெல்ல மெல்ல உயர தொடங்கியது. கடந்த ஆண்டு (2024) சுமார் முப்பது சதவீதம் வரை விலை உயர்ந்து காணப்பட்டது. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை ஏறுமுகமாக தான் உள்ளது. அப்படி தங்கத்தின் விலை குறைந்தாலும் சொற்ப அளவு மட்டுமே குறைந்து மீண்டும் பன்மடங்கு உயரம் காணப்படுகிறது. இதற்கு உலக அளவில் நடைபெறும் சம்பவங்களே காரணம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன?
தங்கம் விலை ஏறுவதற்கான காரணங்களை குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தங்கத்தின் விலை வரும் காலங்களில் குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என குறிப்பிட்டுள்ளார். சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மத்திய வங்கிகளில் டாலருக்கு பதிலாக தங்கங்களை வாங்கி வருவதால் இந்த கடுமையான உயர்வு சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். சீனாவும் ரஷ்யாவும் தங்கத்தை வாங்கிக் கொண்டிருக்கும் வரை இந்த விலை ஏற்றம் இப்படித்தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து அமெரிக்கா அரசு அதாவது இதற்கு முன்னதாக இருந்த பைடன் அரசு ரஷ்யா வசம் இருந்த டாலரை முடக்கியது. அதன் தொடர்ச்சியாக தான் ரஷ்யா டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி வருகிறது. இந்த நிலை மற்ற உலக நாடுகளுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பிற நாடுகளும் தங்கத்தை வாங்கி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
இப்படி உலக நாடுகள் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் தங்கத்தின் விலை கடுமையான உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டுமே 4000 ரூபாய் வரை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி பொருத்தமட்டில் ஒரு கிராம் தங்கம் 8,770 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 70,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 10 நாட்களில் இன்று ஏப்ரல் 22ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 9,290 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம் வாங்கும் பொழுது அதற்கு மூன்று சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் ஸ்டாம்பிங் சார்ஜ், வரி செய்கூலி சேதாரம் உள்ளிட்டவற்றை சேர்த்தால் ஒரு கிராம் தங்கம் என்பது 10 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் என்பது சுமார் ரூ. 80,000 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இனிவரும் காலங்களில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் ஒரு சவரன் சுமார் ஒரு லட்சத்தை கடந்தும் விற்பனையாகும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது